டெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய ஆட்சியின்போது, திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு அடங்கிய தரமற்ற நெய்யை பயன்படுத்தியதாக, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவசர கதியில் குற்றம்சாட்டியதற்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது, திருப்பதி கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் எம்பி சுப்பிரமணியன் சுவாமி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி, வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், ஆன்மிக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர், சுதர்சன் செய்தி தொகுப்பாளர் சுரேஷ் சவாங்கே ஆகியோர் இந்த வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பீகாரில் கடும் வெள்ளப்பெருக்கு!
இந்நிலையில் இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, "இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க இன்னும் உறுதியான ஆதாரம் இல்லை" என கூறியதுடன், "குற்றச்சாட்டுகள் குறித்து அரசு ஏற்கெனவே விசாரணைக்கு (எஸ்ஐடி) உத்தரவிட்டிருந்த நிலையில், இது குறித்து பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?" என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
திருப்பதி கோயிலில் லட்டுகள் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக உறுதியாக முடிவு செய்ய, முதலமைச்சரிடம் ஏதேனும் ஆதாரம் உள்ளதா என நீதிபதி கவாய் கேள்வியெழுப்பினார்.