திருப்பதி:உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படும் நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டை வைத்தார்.
அதனை அடுத்து, திருப்பதி தேவஸ்தானம் போர்டு லட்டுவின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அண்மையில் அதுகுறித்து வெளியான அறிக்கையில், லட்டுவில் மீன் எண்ணெய், விலங்குகள் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது உறுதி ஆனது.
இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, லட்டு கலப்படம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஆந்திர அரசிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு, அதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க:திருப்பதி லட்டு விவகாரம்: "தெலுங்கு தேசம் மத விஷயங்களை அரசியலாக்குகிறது": ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு!
இது குறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் கூறியதாவது; லட்டு மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது என்றும், கலப்படம் செய்யப்பட்ட நெய்யை வழங்கிய ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்கும் பணியில் வாரியம் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ''ஸ்ரீவாரி லட்டுவின் தெய்வீகத்தன்மையும், தூய்மையும் இப்போது கறைபடவில்லை. லட்டு பிரசாதத்தின் புனிதம் மீண்டும் மீட்கப்பட்டது. லட்டு பிரசாதத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதில் திருப்பதி தேவஸ்தானம் உறுதியாக உள்ளது'' என்று பக்தர்களுக்கு தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்