சிம்லா:ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லா மாவட்டத்தின் ராம்பூருக்கு உட்பட்ட சமீஸ் காத் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் மேகவெடிப்பு ஏற்பட்டு அடைமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் விளைவாக பெருக்கெடுத்த வெள்ளதால், அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாலங்கள், நடைபாதைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகி உள்ளதாகவும், கிட்டத்தட்ட 30 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும், இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட் காவல் துறை தெரிவித்துள்ளது.
பெருவெள்ளம் காரணமாக, விவசாய நிலங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை அமைச்சர் ஜகஸ் சிங் நேகி கூறியுள்ளார்.
அத்துடன், கனமழை விளைவாக சிம்லாவின் அண்டை மாவட்டமான குலுவிலும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் அங்கு சிலர் காணாமல் போயிருப்பதாகவும் உள்ளூர் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்லாவை போன்றே மண்டி மாவட்டத்துக்குட்பட்ட தலட்டுக்கோட் பகுதியிலும் மேகவெடிப்பு காரணமாக புதன்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காணாமல் போயிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பீஸ் நதியில் பெருக்கெடுத்துள்ள வெள்ளத்தின் விளைவாக, சண்டீகர் - மாணலி நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுலு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். கனமழை பெருவெள்ளத்தில் பலியானவர்களுக்கு, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் வயநாட்டில் மாவட்டத்துக்குட்பட்ட மூன்று கிராமங்களில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை கிட்டத்தட்ட 300 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளன. இந்த நிலையில் ஹிமாசலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 287 ஆக உயர்வு.. கேரளாவுக்கு விரையும் தேசிய தலைவர்கள்