திருப்பதி: ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்போதையா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார். அந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து திருப்பதி லட்டு மீதான சர்ச்சை தொடங்கியது.
லட்டு பிரசாத விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணை தொடர்பான சிறப்பு குழுவில் மாநில காவல்துறை மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
ஆறு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு இன்று (டிச.14) காலை வந்து ஆய்வு செய்தனர். பிறகு கோவிலின் பல்வேறு பிரிவுகளில் சோதனை நடத்தினர். குறிப்பாக லட்டு பிரசாதம் தயாரிக்கப்படும் கோவில் சமையலறையிலும் விசாரணை குழுவினர் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க:நடுநடுங்கும் தலைநகர் டெல்லி; வெடிகுண்டு மிரட்டல்களால் பதற்றத்தில் பள்ளிகள்..!
லட்டுக்கான தர பரிசோதனைகள் நடத்தப்படும் ஆய்வகம், மலையில் அமைந்துள்ள மாவு ஆலை ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த குழு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, திருப்பதிக்கு வந்து, லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய் கலப்படம் குறித்து விசாரித்தது. தொடர்ந்து, கலப்பட வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, திருமலை கோவில் வளாகத்துக்குள் பேட்டி அளிப்பது, அரசியல் மற்றும் வெறுப்பு கருத்துக்களுக்கு தடை விதித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. திருமலை விவகாரத்தில் விதி மீறுவோர் மீதும், பொய் தகவலை பரப்புவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், திருமலையில் பணிபுரியும் இந்து அல்லாத ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதவும் தேவஸ்தானம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.