ஹைதராபாத்: ஒரு நாட்டின் குடிமக்கள், தங்களை ஆளும் அரசின் செயல்பாடுகள், நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை கேள்விக் கேட்கும் வாய்ப்பை பெற்றிருப்பது ஜனநாயகத்தின் வெற்றிக்கான சிறந்த அடையாளமாகும். சுதந்திரமான மற்றும் நேர்மையான முறையில் நடத்தப்படும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் ஓர் அரசை வெளிப்படைத்தன்மையுடன் வைத்திருப்பதற்கான நல்ல அறிகுறியாகும்.
தேர்தலுக்குப் பிறகு அமையப்பெறும் ஆட்சியில் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த 2005ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட RTI எனப்படும் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம், கடந்த இருபது ஆண்டுகளில் தனி நபர்கள், அமைப்புகளால் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேசமயம் இச்சட்டம் அவ்வப்போது சில நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.
ஆர்டிஐக்கு அடித்தளமிட்ட ராஜஸ்தான்:ஆர்டிஐ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே, பொதுமக்களுக்கு தவலறியும் உரிமையை பெற்றுதரும் போராட்டம் ராஜஸ்தானில் முன்னெடுக்கப்பட்டது. சமூக ஆர்வலர் அருணா ராய் தலைமையில், கடந்த 1994 இல், அம்மாநில விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை அங்கமாகக் கொண்டு மஸ்தூர் கிசான் சக்தி (MKSS) இயக்கம் தொடங்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளின் வரவு - செலவுகள் குறித்து பொது தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்திய இந்த இயக்கம், உள்ளாட்சி நிர்வாகங்களின் நிதி மேலாண்மையில் பல்வேறு நிலைகளில் நடைபெற்ற முறைகேடுகள், ஊழல்களை அம்பலப்படுத்தியது. உள்ளாட்சி நிர்வாகத்தை பொது விசாரணைக்கு உட்படுத்தும் நேர்த்தியான உத்தியின் மூலம் இது சாத்தியமானது. இதனடிப்படையில், ஆர்டிஐ சட்டத்துக்கு ராஜஸ்தானில் உருவான மஸ்தூர் கிசான் சக்தி (MKSS) இயக்கம் அடித்தளமிட்டது எனலாம்.
அருணா ராயின் எம்.கே.எஸ்.எஸ். இயக்கம் ராஜஸ்தானில் பற்றவைத்த தீ, 1996-இல், தகவலறியும் உரிமை போராட்டமாக தேசிய அளவில் பரவியது. பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தேசிய இயக்கம் (NCPRI) இப்போராட்டத்தை முன்னெடுத்தது. ஊடகவியலாளர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அங்கமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டு வந்தது.
இந்த இயக்கம், பிற தன்னார்வ அமைப்புகள் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து தகவலறியும் உரிமைச் சட்ட மசோதா குறித்த ஓர் வரைவை மத்திய அரசுக்கு அனுப்பியது. "தகவல் உரிமைச் சட்டம் 1997" என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவை உருவாக்கியதில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அப்போதைய தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான பி.பி.சாவந்த் முக்கியப் பங்கு வகித்தார்.
முதல் மாநிலமான தமிழ்நாடு:தகவலறியும் உரிமைச் சட்டத்தை 2005 இல் மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன் பல மாநிலங்கள் இச்சட்டத்தை நிறைவேற்றின. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு, 1997-இல் இச்சட்டத்தை இயற்றியது. ஏழு சட்டப்பிரிவுகளை மட்டும் கொண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு தவலறியும் உரிமைச் சட்டம், சில விதிவிலக்குகளையும் வரையறுத்திருந்தது. பாதுகாப்பு, சர்வதேச உறவுகள், ஆளுநருக்கும், மாநில அமைச்சர்களுக்கும் இடையேயான ரகசிய உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் பெற முடியாது என்று வரையறுக்கப்பட்டிருந்தது.தமிழ்நாட்டை தொடர்ந்து, கோவா மாநில அரசும் 1997 இல் இச்சட்டத்தை அமல்படுத்தியது.
இந்தச் சட்டத்தின் அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக, பல்வேறு அரசு துறைகளு்ககு நிர்வாகரீதியான உத்தரவுகளை மத்தியப் பிரதேச மாநில அரசு பிறப்பித்தது. இதனிடையே, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றப் பின்னணி, சொத்து விவரங்கள், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், இதன் மூலம் தேர்தலில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் கோரி, தேர்தல் சீர்திருத்தத்துக்கான ஜனநாயக அமைப்பு (ADR) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இறுதியில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வாக்காளரின் அடிப்படை உரிமை:இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது அவர்களின் அடிப்படை உரிமையாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் குறித்த விவரங்களை வாக்காளர்கள் அறிவதென்பது, அவர்களின் அடிப்படை உரிமையின் ஓர் அங்கமாகும்.
எனவே, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை உறுதிசெய்யும் பொருட்டு, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது தங்களின் குற்றப் பின்னணி, சொத்துகள், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை அளிப்பதை கட்டாயமாக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்பே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும் வழிமுறை செயல்பாட்டுக்கு வந்தது. இந்த விதத்தில் வாக்காளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.
அமலுக்கு வந்த ஆர்டிஐ சட்டம்:இதனிடையே, தகவல் உரிமைச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இம்மசோதாவில், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) மற்றும் பொதுமக்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தேசிய இயக்கம் (NCPRI) தங்களின் வரைவு மசோதாவில் குறிப்பிட்டிருந்த பல்வேறு அம்சங்கள் நீர்த்துப்போக செய்யப்பட்டிருந்தது.