அயோத்தி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலில், குழந்தை வடிவிலான ராமனை பிரான் பிரதிஷ்டா செய்யும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதற்காக இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் முக்கிய பிரதிநிதிகள், திரைப் பிரபலங்கள், சாதுக்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
பகல் 12.20 மணிக்கு தொடங்கியுள்ள பிரான் பிரதிஷ்டா நிகழ்வு 1 மணியளவில் முடிவடைந்தது. இந்த நிகழ்வையொட்டி, பிற தலங்களையும் பிரதமர் தரிசித்தார். மேலும், இந்த நிகழ்விற்காக நாட்டின் பல்வேறு இடங்களில் பலவிதமான பொருட்களும், பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களுடன் பக்தர்களும் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இதனால், அயோத்தி முழுவதும் பலகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலின் சிறப்புகள்:பாரம்பரிய நாகரா முறையில் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயில், கிழக்கு-மேற்காக 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது. இந்தக் கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மற்றும் சுவர்களில் இந்துக் கடவுள்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கோயிலின் தரைத்தளத்தில் உள்ள முதன்மைக் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.