புதுடெல்லி: கோரிக்கை விடுக்காமல் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு முன் வந்திருப்பதாக அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி,"என்னுடைய தந்தைக்கு நினைவிடம் உருவாக்கப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு என் இதயத்தில் இருந்து நன்றி தெரிவிப்பதற்காக நன்றியை வெளிப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தேன். நினைவிடம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்காவிட்டாலும், இது மிகவும் விரும்பத்தகுந்தது என்று கருத்தில் கொள்ள வேண்டும். பிரதமரின் இந்த எதிர்பாராத, ஆனால் உண்மையிலேயே கருணையுள்ள செயலால் நான் மிகவும் மகிழ்ந்தேன்.
கவுரவத்தை கேட்டுப் பெறக்கூடாது என்று எப்போதுமே தந்தை (பிரணாப் முகர்ஜி) சொல்வார். இதுவும் கூட அவ்வாறு வழங்கப்பட்டதுதான். என் தந்தையின் நினைவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி இதனை மேற்கொண்டதற்கு நான்மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றேன். இதனை வரவேற்பதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ அப்பாற்பட்ட இடத்தில் என் தந்தை இருக்கிறார். எனவே இது என் தந்தையை பாதிக்காது. ஆனால்,அவரின் மகளாக என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை,"என்று கூறியுள்ளார்.