ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள தோமலாபெண்டா பகுதியில் இயங்கி வரும் சுரங்கப்பாதை, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் (எஸ்எல்பிசி) சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதையில் நேற்று (பிப்.22) சனிக்கிழமை வழக்கம் போல் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், திடீரென சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 40 ஊழியர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப், செகந்திராபாத் காலாட்படை பிரிவின் கீழ் இயங்கும் இந்திய ராணுவத்தின் பொறியாளர் ரெஜிமென்ட், இராணுவம் அதன் பொறியாளர் பணிக்குழு (ETF), இராணுவ மருத்துவப் பரிவு ஆகியோர் தெலங்கானா தலைமைச் செயலாளர் தலைமையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த சில மணி நேரங்களில், 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர்.
மீட்புப் பணியில் அதிகாரிகள்:
மீட்புப் பணிகள் குறித்து என்டிஆர்எஃப் துணை கமாண்டன்ட் சுகேந்து தத்தா கூறுகையில், "விபத்துக்குள்ளான சுரங்கப்பாதைக்குள் 8 பேர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை சரிவானது, சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 14 கிலோமீட்டருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 10 மணி நிலவரப்படி சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 13.5 கிமீ தூரத்திற்கு மீட்பு பணிகளை செய்துள்ளோம். 32 பேரை மீட்டுள்ளோம். இரண்டாம் நாளான இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்கள்:
என்ஜின்கள், பம்பிங் செட்கள், கவசக் குழாய்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். இதில், இறுதியாக சுமார் 2 கிமீ தூரம் கன்வேயர் பெல்ட் மற்றும் நடைப்பயணம் மூலம் கடந்து வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடைசி 200 மீட்டர் முழுவதும் படுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் உடைந்த மணல்களாக இருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு விரர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிய ஊழியர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. எனவே சுரங்கப்பாதை இடிந்து விழுந்த மணல்கள், கல்களை டன்னல் போரிங் மெஷின் மூலம் அகற்றி சிக்கிய ஊழியர்கள் இருக்கின்றனரா? என தேட வேண்டும். தற்போது சுரங்கப்பாதைக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அது முடிந்ததும் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை தொடங்குவோம்” எனத் தெரிவித்தார்.