டெல்லி:குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களின் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்து, சக மாணவர்கள் முன்னிலையில் வலுக்கட்டாயமாக ரோஜாக்கள், மல்லிகைப் பூக்கள், சாக்லேட் போன்றவற்றைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதைப் பாதிக்கப்பட்ட பெண் ஏற்க மறுத்த போதிலும், ஆசிரியர் அதை வலுக்கட்டாயமாக ஏற்கும் படி வலியுறுத்தி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அதே நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணை மற்றொரு ஆசிரியர் அழைத்து, பூக்களை வழங்கிய ஆசிரியரிடம் ஏன் பேச மறுக்கிறீர்கள் என்றும், அவரிடம் பேசாவிட்டால் அவர் இறந்து விடுவார். அதற்கு நீயே பொறுப்பாவாய் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், போக்சோ சட்டத்தின் 12வது பிரிவின் கீழ், முக்கிய குற்றம் சாட்டப்பட்டவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், இரண்டாவது ஆசிரியருக்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 506இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் வழங்கியது. 2022 நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, இரண்டு ஆசிரியர்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீபங்கர் தத்தா, கே.வி. விஸ்வநாதன் மற்றும் சந்தீப் மேத்தா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை வந்த போது, “இந்த வழக்கு பாலியல் குற்றத்திற்கு மாறாகச் சற்று வித்தியாசமானது. ஒரு ஆசிரியர் பல ஆண்டுகளாகச் சேவை செய்வதன் மூலம் நற்பெயர் பெறுகிறார். ஆகவே அவரது கண்ணியமான வாழ்க்கை ஆபத்தில் ஆழ்த்தாமல் இருக்க வேண்டும். ஆகவே, குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனையைப் பெறுவதற்குப் பொருத்தமற்றதாக கருதப்படுகிறது.
இரண்டாவது ஆசிரியரைப் பொறுத்தவரையில், ஐபிசியின் 506 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய கிரிமினல் மிரட்டல் வழக்கு என்பதை நிரூபிப்பதில் வெற்றியடைந்ததாகக் கருதவில்லை. இரண்டு ஆசிரியர்களும் இன்னும் சிறையில் இருக்கும் நிலையில், அவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை எனில் அவர்களைக் காவலிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:ஆபாச பட வழக்கு: "நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்து கொடுமையானது" - உச்சநீதிமன்றம் கண்டனம்!