டெல்லி : கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மே மாதம், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனை எதிர்த்து அவரது தாயார் ஏ.கமலா உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை கடந்த ஆக.14ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், "மனுதாரர் (சவுக்கு சங்கர்) மீது பதியப்பட்ட 16 வழக்குகளிலும், எவ்வித கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்காத வண்ணம் சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்கு உட்பட அனைத்து வழக்குகளின் விரிவான முதல் தகவல் அறிக்கையை(எஃப்ஐஆர்) தமிழ்நாடு காவல் துறை சமர்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று(செப்.25) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை அறிவுரைக் கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவுரைக் கழகத்தின் பரிந்துரையின் படி, அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்தது.