புதுடெல்லி:விதிகள் அனுமதிக்காதபட்சத்தில், அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான விதிமுறைகளை இடையிலோ அல்லது ஆட்சேர்ப்பு நடைமுறைகள் தொடங்கிய பின்னரோ, பணி நியமனங்களை நிர்வகிக்கும் அமைப்பு மாற்ற முடியாது என்று குறிப்பிடத்தக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. ஆட்டத்தின் விதிமுறைகளை அதன் நடுவில் மாற்ற முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஹிருதிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்மன், பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அமைப்பு, தெரிவு நடைமுறையின் வெவ்வேறு நிலைகளுக்கு தனித்தனி வரைமுறைகளை வகுக்க முடியும் என்றாலும், ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு இடையிலோ அல்லது தொடங்கிய பின்னரோ விதிமுறைகளை மாற்ற முடியாது என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறு, தற்போதைய விதிமுறைகள் அல்லது விளம்பரத்தின்கீழ் பணி நியமன விதிமுறை மாற்றங்கள் அனுமதிக்கப்படுமேயானால், அது அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின் அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன், அந்த முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.