டெல்லி :மகாராஷ்டிராவில் சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி), பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜக தரப்பில் தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வருகின்றனர்.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு எதிர்தரப்பில் உள்ள சிவசேனா - பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும் அவரது அணி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டன.
இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி அஜித் பவார் மற்றும் சரத் பவார் தனித்தனியே தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதில் அஜித் பவார் தரப்பே உண்மையானது என்றும் கட்சி மற்றும் சின்னத்தை அஜித் பவார் அணிக்கு ஒதுக்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து, அஜித் பவார் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம், சரத் பவார் முறையிட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சபாநாயகர் ராகுல் நர்வேகர் அஜித் பவார் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தார்.