டெல்லி:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது சர்ச்சையானது. இந்த நிகழ்வு குறித்து எதிர்கட்சிகள் பல கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்கட்சியின் சட்ட ஆலோசகர்கள், “இந்த நிகழ்வு நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இருக்கும் உரிமை மற்றும் சுதந்திரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. ஒரு நீதிபதி தனது வீட்டிற்கு பிரதமரை அழைத்து, ஒரு மதம் சார்ந்த பண்டிகையைக் கொண்டாடுவது ஏற்கத்தக்கதாக இல்லை” என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், “இந்தச் சந்திப்பானது தனிப்பட்ட கலாச்சாரம் சார்ந்த சந்திப்பாகும். இது போன்ற சந்திப்புகளில் நீதித்துறை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதில்லை.
இதுபோல் பல முறை மாநில முதல்வர்களை அவ்வப்போது சந்தித்து பல விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் அதிலும் தனிப்பட்ட மற்றும் நீதித்துறைக்கென வரம்புக் கோடுகள் உள்ளது. பொதுவாக பட்ஜெட், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் போன்ற அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும்.
சட்டம் கூறுவது போல், நீதித்துறையும், நிர்வாகமும் தானியங்கிகள் தான். ஒன்றை ஒன்று சாராதது. இரண்டும் சுதந்திரமாக செயல்படுவது தான் ஜனநாயகத்தின் மையாகும். ஆனால் அதற்காக நீதித்துறையும், நிர்வாகமும் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை.