டெல்லி:ஆந்திர மாநிலம் மச்செர்லா சட்டமன்ற தொகுதியில் கடந்த மே மாதம் 13ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆந்திர உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், எம்எல்ஏவின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எப்படி இடைக்கால ஜாமீன் வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், நாளை (ஜூன்.4) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மச்செர்லா சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் மட்டுமின்றி தொகுதிக்குட்டப்பட்ட பகுதியில் கூட இருக்க அனுமதிக்க முடியாது எனக்கூறி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நம்பூரி சேஷகிரி ராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அரவிந்த் குமார் மற்றும் சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு, பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தும் வீடியோவை ஆய்வு செய்தது.
அதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இது சுத்த விதி மீறல் எனவும் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எதன் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் வழங்கியது என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதன் வீடியோ பதிவு தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்திலும் பகிரப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கில் ரெட்டிக்கு ஜூன் 5ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணையை ஜூன் 6ஆம் தேதி நடத்த உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ரெட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணும் மையம் மற்றும் பகுதிக்குள் அவர் வரமாட்டார் என உறுதிமொழி அளிக்க தயார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இமாச்சலில் நீண்ட இழுபறிக்கு பின் சுயேட்சை எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பு! காங்கிரஸ் போடும் திட்டம் என்ன? - Himachal Pradesh MLAs Issue