சுல்தான்பூர் : கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடாக தேர்தலை முன்னிட்டு பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பாஜக மாவட்ட துணை தலைவர் விஜய் மிஸ்ரா என்பவர் சுல்தான்பூர் நீதிமனறத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ராகுல் காந்தி இன்று (பிப்.20) வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பாரத் ஜோடோ யாத்திரையை தொடர்ந்து தற்போது ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். ஏறத்தாழ 38 நாட்களை எட்டியுள்ள ராகுல் காந்தியின் நியாய யாத்திரை தற்போது உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பர்சன்ட்கஞ்ச் பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
வழக்கு விசாரணைக்காக யாத்திரை சிறிது நேரம் நிறுத்தப்பட்ட நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் மீண்டும் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து யாத்திரை ரேபரலி வழியாக லக்னோவை சென்றடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஏறத்தாழ 15 மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் 6 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் தூரத்திற்கு யாத்திரை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு! 6 டிரங்கு பெட்டிகளுடன் வர நீதிமன்றம் உத்தரவு! மொத்தம் எவ்வளவு தெரியுமா?