சென்னை:"திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளான பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டு அவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 6 பெட்டிகள் தரம் புரண்டதில் இரு ஏசி பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இந்த ரயிலில் பயணித்தோர் பெரும்பாலானோர் வடமாநிலத்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளன. காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பிற பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விபத்துக்கு உள்ளான பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னை மாநகரப் பேருந்து மூலம் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இன்னொரு எக்ஸ் பதிவில், விபத்துக்குள்ளான பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் எம்ஜிஆர் சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் அதிகாலை 4.45 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன," என்று கூறப்பட்டுள்ளது.