திருப்பதி: திருப்பதி கோயில் பிரசாதமான லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட சர்ச்சை ஓயாத நிலையில், தற்போது முந்திரி, திராட்சை உள்ளிட்ட இதர பொருட்கள் கொள்முதலிலும் ஊழல் நடந்துள்ளதாக அடுத்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன.
திருப்பதி லட்டு தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான சர்ச்சை கடந்த சில நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆந்திராவின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு விசாரணையில், சுவாமி பிரசாத நெய் மட்டுமின்றி, முந்திரி, கறிவேப்பிலை, திராட்சை உள்ளிட்ட மற்ற பொருட்களும் தரம் குறைந்ததாக பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஊழலில் ஏகபோகமாக, அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அப்போதைய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் குழுவும், கொள்முதல் குழுவும் இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்.. உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்ன?
தேவஸ்தானத்துக்கு ஏகபோக அடிப்படையில் மூலப் பொருள்கள் வழங்கியவர்கள், பைகளின் அடிப்பகுதியில் தரம் குறைந்த பொருட்களை நிரப்பி, மேலே தரமான பொருட்களை வைத்து அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்தும், கண்காணிப்பு அதிகாரிகள் தரமான பொருட்களின் மாதிரிகளை எடுத்துச் சென்று திருமலையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து எல்லாம் சரியாக உள்ளது என உறுதி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தற்போதைய விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு இன்னும் ஒரு வாரத்தில் அரசிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், ஸ்ரீவாணி அறக்கட்டளையின் பெயரில் கோயில்களை புனரமைப்பதற்காக தேவஸ்தான நிர்வாகத்தினர் விருப்பப்படி நிதியைச் செலவிட்டதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அரசியல் நோக்கங்களுக்காக விருப்பப்படி நிதி வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பணி ஆணைகள் தேர்தலுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ளன. மற்ற கோயில்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வழங்க விதிகள் அனுமதிக்கும் நிலையில், 63 கோயில்களுக்கு ரூ.35 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்ட சில கோயில்களின் பெயரிலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.