புதுடெல்லி:இந்தியாவுக்கு மூன்று நாட்கள் பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் அனுரா திசநாயகே நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பின்னர், இந்த சந்திப்பு பலன் அளிக்கும் வகையில் இருந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை அதிபராகப் அனுரா குமார திசநாயகே பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக இந்தியாவுக்கு அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த அவரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், "இலங்கை அதிபர் திசநாயகே வருகை இந்தியா-இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு உதவும் மேலும் இருநாட்டு மக்களை மையப்படுத்திய கூட்டாண்மைக்கும் இது வேகம் அளிக்கிறது. இலங்கை அதிபருக்கு அருமையான மற்றும் சிறப்பான வரவேற்பு," என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இலங்கை அதிபர் திசநாயகே நேற்று இரவு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார். இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் உத்திப்பூர்வமாக விரிவாக்கம் செய்வதற்கான வழிகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையேயான ஒட்டு மொத்த உறவுகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தன்னார்வலர் சுசீர் பாலாஜி மரணம்-எலான் மஸ்க் உள்ளிட்டோர் இரங்கல்
இரண்டு நாடுகளுக்கு இடையேயான முன்னேற்றம் என்பது ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்த ஒன்று என்றும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு, உணர்வு பூர்வமான விவகாரங்களை கருத்தில் கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருப்பதாக இந்தியா தரப்பில் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு குறித்து தமது எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை அதிபர் திசநாயகே, வெளியுறவுத்துறை அமைச்சர் , "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனான சந்திப்பு பரஸ்பரம் நலனுக்கான விஷயங்கள் குறித்து பலனளிக்கும் வகையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்று குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி இலங்கை அதிபர் திசநாயகேவுக்கு வரவேற்பு அளிக்கப்படடது. இதனைத் தொடர்ந்து அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது அவரிடம் இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை அதிபர் திசநாயகே நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. குறிப்பாக தமிழர்களுக்கு அதிகம் அதிகாரம் அளிக்க வகை செய்யும் அந்த நாட்டின் 13ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை விரைவில் நிறைவேற்ற நடவடி்ககை எடுக்கும்படி இலங்கை அதிபரிடம் இந்தியா சார்பில் வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இலங்கை அதிபர் திசநாயகே, டெல்லியில் தொழில் அதிபர்களுடன் சந்தித்துப் பேசுகிறார். இலங்கையில் முதலீடுகள் மேற்கொள்ள வருமாறும் அவர் அழைப்பு விடுப்பார். இதனைத் தொடர்ந்து அவர் புத்தகயாவுக்கும் செல்ல உள்ளார்.