டெல்லி:நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சோனியா காந்தி, "அதனை நான் வரவேற்கிறேன். ஏன் கூடாது?" என்று தெரிவித்தார். முன்னதாக பிதரமர் மோடி தனது பதிவில், "முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறித்த அறிவிப்பில், "ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டிற்காக பி.வி.நரசிம்ம ராவ் பணிபுரிந்தார். அவர் பிரதமராக இருந்த காலம், பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை நாடு கண்டது.
இந்தியாவின் கலாசாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார் என தெரிவித்து உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்எ.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது குறித்த அறிவிப்பில், "விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது" என்று பிரதமர் மோடி பதிவிட்டு இருந்தார்.
இதையும் படிங்க :மக்களவை தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி பேர் தகுதி - இந்திய தேர்தல் ஆணையம்!