ஹசன்:மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்சியும், பாலியல் வீடியோ வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதருமான சுரஜ் ரேவண்ணா மீது அதே கட்சியை சேர்ந்த இளைஞர் தன்பாலின சேர்க்கை புகார் அளித்து உள்ளார். அரகலகூடு டவுன் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் அளித்த புகாரில் சுரஜ் ரேவண்ணா, கடந்த ஜூன் 16ஆம் தேதி கன்னிகாடா பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைத்து தன்பாலின ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளித்து உள்ளார்.
இது தொடர்பாக இளைஞர் அளித்த புகாரில் ஹோலேநரசிபுரா போலீசார் சுரஜ் ரேவண்னா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சுரஜ் ரேவண்ணாவிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை கைது செய்து சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்மந்தமாக சுரஜ் ரேவண்ணா மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தன் மீது பொய்யான வழக்கு ஜோடிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசாரின் விசாரணையில் விரைவில் உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்துவதற்காக திட்டமிட்ட அரசியல் சதி என்றும், அதை தன்னால் ஒரு போது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுரஜ் ரேவண்னா தெரிவித்துள்ளார்.
சட்டத்தை முழுமையாக நம்புவதாகவும் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவு விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் சுரஜ் ரேவண்ணா கூறியுள்ளார். இதனிடையே, புகார் அளித்த இளைஞர் மீது சுரஜ் ரேவண்ணாவின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்த சிவகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.