டெல்லி : நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து 2024 - 25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நடப்பாண்டில் மூலதன செலவீனங்களுக்காக நிதியை 11 புள்ளி 1 சதவீதம் உயர்த்தி 11 புள்ளி 11 லட்சம் கோடி ரூபாயாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் நீண்ட கால அரசின் சொத்துகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் மூலதன செலவீனங்களுக்கான தொகை 33 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதி ஆண்டின் முழு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன செலவீனங்களுக்கான தொகையை 33 சதவீதம் உயர்த்தி 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். மூலதன செலவீனங்களுக்கான தொகையை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திறன் அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் அபரிவதமான வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளில் மக்கள் சார்ந்த சீர்திருத்தங்களை கண்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது மத்திய அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும், அதில் இருந்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.