கேரளா :திருச்சூர் மாநிலம் நாட்டிகா பகுதியில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர்கள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில், லாரி ஏறிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நாட்டிகா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, இன்று (நவ.26) அதிகாலை 4 மணியளவில் ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியுள்ளது.
அந்த கோர விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.