ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா மாவா சாலையில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இதுவரை குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்று பிற்பகல் வேளையில் டிஆர்பி விளையாட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட உடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்த ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜூ பர்கவா, தாங்கள் முடிந்தவரை உடல்களை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த விளையாட்டு வளாகத்தின் உரிமையாளரான யுவராஜ் சிங் சோலங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு குஜாரத் முதலமைச்சர் உடனான தொலைபேசி உரையாடலில், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கான முயற்சிகள் குறித்து என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.