புது டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு அண்மை காலமாக மின்னஞ்சல்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.14) டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
'எந்த மனிதனும் தப்ப முடியாது'
அந்த வகையில், இன்று டிபிஎஸ் ஆர்கே புரம், ரியான் இன்டர்நேஷனல் பள்ளி, வசந்த் குஞ்ச் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. இன்று காலை 6.12 மணியளவில் ''childrenofallah@outlook.com'' முகவரியில் இருந்து வந்த மிரட்டல் செய்தியில், '' அல்லாவின் தண்டனையை எதிர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளை அல்லா காண்கிறான். ஆனால் அவை பயனற்றவை. அல்லாவின் தீர்ப்பில் இருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. அல்லாவை எதிர்க்கும் அனைவரையும் எதிரிகள் என்று முகமது நபி உலகுக்கு அறிவிக்கிறார். அல்லாவின் புனிதச் சுடரில் குழந்தைகளை எரிக்க முஹம்மது நபி அனுமதித்துள்ளார். ஆனால், நீங்கள் எங்களை தடுக்க முயற்சிப்பதை காண்கிறோம். அது உங்களால் முடியாது. சனிக்கிழமையன்று மாணவர்கள் இல்லாத கட்டிடங்கள் இடிக்கப்படும். எங்கள் வெடிகுண்டு உடைகள் நபிகள் நாயகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவை. அவர்கள் தங்கள் இலக்கை இழக்க மாட்டார்கள். எங்கள் குழந்தைகள் அல்லாவின் துணிச்சலான வேலைக்காரர்கள் "என்று மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதுவும் கிடைக்கவில்லை
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததையடுத்து பள்ளிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளன. தகவல் கிடைத்ததும் டெல்லி போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.