உத்தரபிரதேசம் (ஜான்சி):உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 16க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் சிசு பராமரிப்புப் பிரிவில் நேற்று (நவ.15) இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து என்.ஐ.சி.யுவின் வெளிப்பகுதியில் இருந்த குழந்தைகளும் மற்றும் உள் பகுதியிலிருந்த சிலரும் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த கோர விபத்து சம்பவத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட நபர்கள் காயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:மருத்துவமனைக்குள் புகுந்த சைக்கோ கணவன்.. மனைவி, மகள்களை அடித்து கொலை.. அருணாச்சல் அதிர்ச்சி.!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார், மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மின்கசிவு காரணமாக இருக்கலாம் எனவும், விபத்தில் சிக்கி நபர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது, NICU-வில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது வரை 10 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஒருவேளை உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜான்சி மாவட்ட எஸ்எஸ்பி சுதா சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ஜான்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் என்ஐசியுவில் நடந்த தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் வருத்தத்தையும், மனவேதனையையும் அளிக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். மேலும், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்," எனப் பதிவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்