ஐதராபாத்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மனைவி ரித்திகா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது 2வது குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா அணி பங்கேற்கவுள்ளது.
வரும் 22ஆம் தேதி இந்திய அணி பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. ஆனால் இதுவரை கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை.
இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோகித் சர்மா மும்பையிலேயே இருந்து வந்தார். இதற்கான காரணம் குறித்து ரசிகர்களுக்கு வெளிப்படையாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், ரோகித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே ரோகித் சர்மாவுடன் அவரின் மனைவி ரித்திகா எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியை காண வந்த போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2015ஆம் ஆண்டு திருமணம் முடிவடைந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது, பெண் குழந்தைக்கு சமைரா என இருவரும் பெயர் சூட்டினர். இந்நிலையில், இரண்டாவதாக பிறந்த குழந்தைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு சாதனை சமன்! ஒரே இன்னிங்சில் 2 வீரர்கள் முச்சதம் விளாசல்!