ஐதராபாத்: மாசடைந்த காற்றால் நமது சுவாசப்பாதை பாதிக்கப்பட்டு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் மாசடைந்த காற்று நமது மன நலனையும் பாதிக்கும் என சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வெளிப்புற மற்றும் உள்ளரங்கு காற்று மாசு மனஅழுத்தம், கோபம், தீராக்கவலை மற்றும் மேலும் சில மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஷிசோஃப்ரேனியா (schizophrenia) போன்ற தீவிரமான மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கும் காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மனநல மருத்துவரான பல்லவி ராஜன், PM 2.5 எனும் நுண்துகள்களை சுவாசிப்பதால் ஏற்படும் மனநல பாதிப்புகள், மன அழுத்தம் , கவலை போன்றவற்றை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். "இத்தகைய துகள்களை நீண்ட நாட்கள் சுவாசிப்பது மனநல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்" என அவர் கூறுகிறார்.
" ஏற்கெனவே இருக்கும் மனநல பிரச்சனைகளை காற்று மாசு தீவிரமாக்கும்" எனவும் பல்லவி ராஜன் கூறுகிறார். நேரடியாக மாசடைந்த காற்றை சுவாசிப்பது மூளையில் நியூரோ இன்ஃப்ளமேஷன் எனும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் பல்லவி குறிப்பிடுகிறார். இந்த மாற்றங்கள் மனநலன் சார்ந்த பிரச்சனைகளை இன்னும் மோசமாக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
அமெரிக்க மனநல குழுமத்தின் தரவுகளின்படி, காற்றுமாசு மனநலனில் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான சான்றுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 2023ம் ஆண்டு வெளியிட்ட "மன நலனில் காற்று மாசுவின் தாக்கம் " (Air Pollution’s Impact on Mental Health) என்ற வெளியீட்டில் 100க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்த முடிவுகளின்படி 73 சதவீத ஆய்வறிக்கைகள், அதிக காற்றுமாசுவிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மனிதர்கள் மறறும் விலங்குகளில் மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கான அறிகுறிகள் காண்பிக்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி ஆய்வாளரான கிளாரா ஜி.ஜண்டேல் (Clara G. Zundel) உலக பொருளாதார அமைப்பிற்கு அளித்துள்ள முடிவுகளின்படி, "மாசடைந்த காற்றை சுவாசிக்கும் மனிதர்களின் மூளையில், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக அவர்களில் அதிகமாக கவலை (Anxiety), மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது சுத்தமான காற்றை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் அதிகம்."
2023 ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கையின் படி டிமெண்ஷியா (Dementia) போன்ற தீவிர மனநல பாதிப்புகளுக்கும் காற்று மாசு காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது. குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் காற்றுமாசு பாதிப்புக்கு ஆளாகும் போது எதிர்காலத்தில் இவர்கள் மோசமான மனநல பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
உள்ளரங்கு காற்று மாசு: வெளியே ஏற்படும் காற்று மாசு பற்றியே பலரும் பேசிக் கொண்டிருக்கும் சூழலில், வீடுகளுக்கு உள்ளே ஏற்படும் காற்று மாசுவையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வீடுகளில் காற்று வெளியேற முடியாத நிலை, சமையலறையிலிருந்து வரும் புகை வெளியே செல்லாதிருத்தல் போன்றவை உள்ளரங்கில் கார்பன் டை ஆக்சைடு அளவை அதிகரித்து மனநல செயல்பாடுகளை பாதிக்கும் என கூறுகின்றனர்.
இது சோர்வாக உணர்தல், மனதை ஒருமித்து செயல்பட முடியாமை, மூளைச் சோர்வு போன்றவற்றிற்கும் (Brain Fog) காரணமாக அமைகிறது. உள்ளரங்கில் காற்றின் தரத்தை அதிகரிப்பது ஒரு முக்கிய செயல்பாடாக பார்க்கப்படுகிறது. காற்றோட்டத்திற்கான வாய்ப்பை அதிகரிப்பது, உள்ளரங்கில் சமையல் போன் பணிகளின் போது மாசு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது , காற்று சுத்திகரிப்பான் (Air Purifier) பயன்படுத்துவது போன்ற செயல்களை ஊக்கப்படுத்தலாம்.
காற்று மாசுவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:
மனநலனில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர காற்று மாசு ஏற்படுத்தும் உடல்நல பாதிப்புகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நீண்டகால அடிப்படையில் மாசடைந்த காற்றை சுவாசிப்பது சுவாசப்பாதை நோய்களான நுரையீரல் தொற்று, ஆஸ்த்துமா போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். தூய்மையான காற்றை சுவாசிப்பது உடல்நலனுக்கு மட்டுமின்றி உள்ள நலனுக்கும் முக்கியமானது என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.