ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ், கடந்த ஜூன் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் பவன் கல்யாண், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜெகபதி பாபு, இயக்குநர் ராஜமெளலி, ரவி பிரகாஷ், பிரம்மானந்தம் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், தொழிலதிபர்களும் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். இவர்களில் பலர் ராமோஜி ராவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டியை உருவாக்கிய பெருமைக்குரியவர் ராமோஜி ராவ். அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி டெலிவிஷன் மற்றும் ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களை தொடங்கி ஊடக உலகிற்கு பெரும் பங்காற்றி உள்ளார்.
இந்த நிலையில், ஊடக சக்கரவர்த்தியான ராமோஜி ராவிற்கு, ஈடிவி கன்னடத்தில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். ஈடிவி கன்னடத்தில் பணியாற்றிய பத்திரிக்கையாளர்கள், பெங்களூரு பிரஸ் கிளப்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மூத்த பத்திரிக்கையாளர் ரவி கவுடா மற்றும் ஈடிவி கன்னடத்தில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர்கள் ராமோஜி ராவுடன் பணியாற்றிய தருணங்கள், அவரின் சாதனைகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ண உபாத்யாயா, “ராமோஜி சார் உண்மையில் நம் அனைவருக்கும் அன்னதாதா. அவர்தான் விவசாயிகளுக்காக ‘அன்னதாதா’ போன்ற நிகழ்ச்சிகளை தனியார் ஊடகங்களில் கொண்டு வந்தார்” என்று கூறினார்.
அன்னதாதா என்ற சொல்லின் பொருள் அன்னம் அளிப்பவர்; அதாவது உணவளிப்பவர். நாம் உண்பதற்கான காய்கறி மற்றும் உணவுப் பொருட்களை விளைவித்து தருவதால், விவசாயிகளை அன்னதாதா என்ற அழைக்கிறோம். விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் பிரச்சனைகளை எடுத்து கூறுவதற்காக, ராமோஜி ராவால் 1969-இல் ‘அன்னதாதா’ என்ற விவசாயிகளுக்கான தெலுங்கு மொழி மாத இதழ் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய பத்திரிக்கையாளர் ராமகிருஷ்ண உபாத்யாயா, “ஊறுகாய் வணிகம் முதல் ஊடகம் வரை பல்வேறு துறைகளில் கால்பதித்து அதில் வெற்றியும் கண்டவர் ராமோஜி சார். பல்வேறு துறைகளை கட்டியாண்டாலும் ஊடகத் துறையின் நிர்வாகத்தை அவரே கண்காணித்து வந்தார். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி அனைத்து ஆய்வுகளையும் நடத்துவார். அவரின் குழுவில் பணியாற்றியதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.