அயோத்தியில் உச்ச கட்ட பாதுகாப்பு உத்தரபிரதேசம்:நாளை(ஜன.22) அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். அது மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், குருக்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
அன்றைய தினம் ராம் லாலா எனப்படும் குழந்தை ராமர் சிலையும் நிறுவப்பட உள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ராம் லாலா சிலை அயோத்திக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த சிலையைக் கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்ல கிரேன் பயன்படுத்தப்பட்டது. நாளை மதியம் 12.20 மணியளவில் கும்பாபிஷேகம் தொடங்கி, 1 மணிக்கு முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினம் 121 ஆச்சாரியார்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த பாதுகாப்பு: ராமர் கோயில் கும்பாபிஷேகம் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 4.5 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மாநில காவல்துறை நவீன ஆயுதங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில், 100 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 325 காவல் ஆய்வாளர்கள், 800 துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் அயோத்தியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அயோத்தி ராமர் கோயிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலய கருவறைப் பகுதியில் சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.
அவர்களுக்குப் பிறகு 2வது அடுக்கில் மத்திய துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 3-வது அடுக்கில் உத்தரபிரதேச மாநில காவல்துறை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வார்கள். முதல் அடுக்கில் இருக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையில் 100 கமாண்டோ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் துணைநிலை ராணுவ வீரர்கள் 1,400 பேர் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ஆலய வளாகம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கோதண்டராமர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!