டெல்லி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் என்பவர் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிறிஸ்துவ மதத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இரு மதத்திற்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் அவருடைய கருத்து உள்ளது. அதனால், அந்தக் கருத்தை நீக்கி அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, இந்தச் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்குத் தரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த பிப்.8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அண்ணாமலையின் முறையீடு மனுவை ரத்து செய்து வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அண்ணாமலை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீடு மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் ஆகியோர் முன்னிலையில் இன்று (பிப்.26) விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் முழு விபரம்: முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் யூடியுப் சேனலின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில், "தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தற்போது தான் தடைகள் கொண்டு வரப்படுகின்றன. இது இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இந்தத் தடை விதிக்க கிறிஸ்துவ மிஷனரிகளின் துணையுடனே நடைபெற்றது" என்று அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.