டெல்லி: கடந்த 1988ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில், கூட்டணியில் இருந்து கொண்டே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், எந்த ஒரு சம்பவம் தொடர்பாகவும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி எழுப்ப முடியாது என தீர்ப்பு வந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த போது, 3 நீதிபதிகள் லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அரசியலமைப்புச் சட்டம் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய இரண்டின் கீழ் விலக்கு உள்ளதாக தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க, எம்.பிக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர் சீதா சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின் ஊழல் தடுப்புச் பிரிவில் வழக்குப் பதிவு செய்வதில் இருந்து சீதா சோரன் விலக்கு கோரினார்.
இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா, சஞ்சய்குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 7 பேர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வெளியிட்டது.