ஐதராபாத்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், இருவருக்கும் ஆயுத சப்ளை செய்ததாக அனுஜ் தபான், சோனுகுமார் பிஷ்னாய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப்பில் தலைமறைவாகி இருந்தஅனுஜ் தபானை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநில சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு பேரையும் ஆஜர்படுத்திய குற்றப்பிரிவு போலீசார், அனுஜ் தபான், விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய மூன்று பேரை மே 8ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றனர்.
இதில் ஆயுதம் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட சோனுகுமார் பிஷ்னாய் மட்டும் மருத்துவ சிகிச்சைக்காக நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் இருந்த அனுஜ் தபான் கடந்த மே 1ஆம் தேதி சிறையில் வைத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை மீட்டு மும்பையில் உள்ள ஜிடி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் அனுஜ் தபான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. என்ன காரணத்திற்காக அனுஜ் தபான் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவராத நிலையில் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், போலீசார் விசாரணையில் நம்பிக்கையில்லாததால், வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அனுஜ் தபானின் தயார் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும், அந்த மனுவில் அனுஜ் தபான் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சிறை மற்றும் லாக் அப்பின் சிசிடிவி காட்சிகளை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கடந்த ஏப்ரல் 24 முதல் மே 2ஆம் தேதி வழக்கை விசாரித்த அனைத்து போலீசாரின் தொலைபேசு உரையாடல் தரவுகளை பத்திரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அனுஜ் தபானின் சடலத்தை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்றும் அவரது தாயாரில் மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பிரஜ்வல் ரேவண்ணா எப்போது சரணடைகிறார்? ஜேடிஎஸ் முன்னாள் அமைச்சர் தகவல்! - Karnataka MP Prajwal Revanna Case