தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு! - saidai duraisamy

vetri duraisamy: ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4-ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 3:47 PM IST

Updated : Feb 12, 2024, 5:59 PM IST

சட்லஜ் ஆற்றில் இருந்து வெற்றி துரைசாமி உடல் மீட்கப்பட்ட காட்சி

சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கடந்த 4-ஆம் தேதி கார் விபத்தில் சிக்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் ஹிமாச்சல பிரதேசத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு வாடகை கார் ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி பயணம் செய்தபோது கின்னூர் பகுதியில் உள்ள சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட திருப்பூர் வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த கோபிநாத கின்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சிம்லா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விபத்தில் சிக்கி காணாமல் போன வெற்றி துரைசாமியைத் தேடும் பணியில் காவல்துறை, ராணுவம், விமானப்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்கள் என பெரும் படையே களமிறக்கப்பட்டுக் கடந்த 9 நாட்களாகத் தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 9வது நாளான இன்று விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றி துரைசாமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை மீட்ட மீட்பு படையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடல் மீட்கப்பட்ட பகுதியில் -7 முதல் -15 வரை குளிர் நிலவுகிறது.

இதுகுறித்து கின்னூர் துணை கமிஷனர் அமித் குமார் சர்மா கூறுகையில், “கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தமிழகத்தைச் சேர்ந்த வெற்றி துரைசமியைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்பு படை, காவல்துறையினர், கடற்படையினர் மாவட்ட பேரிடர் மீட்பு படையினர் 9 நாட்களாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் பாங்கி நலா பகுதி அருகே சுந்தர்நகர் (மண்டி), மஹுவாங் டைவிங் அசோசியேஷன் குழுவினர் வெற்றி துரைசாமி உடலை மீட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெற்றி துரைசாமி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவித்திருந்த நிலையில் தனியார் நீச்சல் வீரர்கள் வெற்றி துரைசாமியின் உடலை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி தாவ மாட்டார் என பிரதமர் மோடி உத்தரவாதம் அளிப்பாரா?" - பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி அதிரடி!

Last Updated : Feb 12, 2024, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details