புதுடெல்லி:முந்தைய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக இருந்தனர் என்பது அரசியலமைப்பு அவையில் நடந்த விவாதங்கள் மூலம் தெரியவருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே,"அரசியலமைப்பு சட்டம், இந்திய கொடி, அசோக சர்க்கரம் ஆகியவற்றை வெறுத்தவர்கள், அரசியலமைப்பு சட்டம் குறித்து இன்று நமக்கு பாடம் எடுக்கின்றனர். பாஜக இட ஒதுக்கீடுக்கு எதிராக இருப்பதால்தான் சாதி கணக்கெடுப்பு நடத்துவதை விரும்பவில்லை
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், சுதந்திரம் குறித்தும், அரசியலமைப்பு சட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை பிரதமர் மோடி வழங்கினார். அரசியலமைப்பை வலுப்படுத்த கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசு என்ன செய்தது. அடிப்படை விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் பாஜக அக்கறையில்லாமல் உள்ளது. உண்மையிலேயே பாஜக அரசியலமைப்பு சட்டத்தை ஆதரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
1971ஆம் ஆண்டு இந்தியா-வங்கதேச போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன். வங்கதேசம் விடுதலை பெற காரணமாக இருந்தவர் இரும்பு பெண்மணியான இந்திரா காந்தி. வங்கதேசத்தின் சிறுபான்மையினரை பாதுகாப்பது குறித்து பாஜக தலைவர்கள் இந்திரா காந்தியிடம் இருந்துபாடம் கற்றுக் கொள்ள வேண்டும்," என்று கூறினார்.
மக்களவையில் வெளிநடப்பு: மக்களவையில் இன்று பேசிய வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, "வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துகள், கிறிஸ்துவர்கள் தாக்குதல் நடத்தப்படுவதை எதிர்த்து இந்தியா கடும் அதிருப்தியை தெரிவிக்க வேண்டும். 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற காரணமாக இருந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்துக் கொள்கின்றேன். 1971ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரண் அடைந்தது குறித்த புகைப்படம் ராணுவ தலைமையகத்தில் இருந்து அகற்றப்பட்டது கண்டிக்கத்தக்கது. மீண்டும் அந்த புகைப்படத்தை இடம் பெற செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார். இந்த கருத்தை வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.