புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றிரவு டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தை (AIIMS) சுற்றியுள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் முகாமிட்டிருந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தார்.
அவர்களின் வேதனைகள் மற்றும் புகார்களைக் கேட்ட ராகுல் காந்தி, மத்திய அரசும் டெல்லி அரசும் நோயாளிகள் மீது உரிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார்.
இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "நோய்களின் வேதனை, கடுமையான குளிர் மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகியவற்றால் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, சிகிச்சைக்காக தொலைதூரத்திலிருந்து பயணம் செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து நள்ளிரவில், கடும்குளிரில் காத்துக்கிடங்கும் மக்களை நான் சந்தித்தேன். அவர்கள் சாலையோரம், நடைபாதைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.
அதே நேரத்தில் குளிர், பசி மற்றும் பல்வேறு துன்பங்கள் இருந்தபோதிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை பற்றிக் கொண்டுள்ளனர். மத்திய அரசும் டெல்லி அரசும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய தங்கள் பொறுப்பில் இருந்து முற்றிலும் தவறிவிட்டன."
இதற்கு முன், டெல்லியில் நடைபாதை வியாபாரிகள், கலைவினை கலைஞர்கள், முடிதிருத்துநர் கடை உள்ளிட்டவற்றுக்குச் சென்ற ராகுல்காந்தி, அந்த மக்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 70 இடங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆறாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திமார்பூரைச் சேர்ந்த லோகேந்திர சவுத்ரி மற்றும் ரோஹ்தாஸ் நகரைச் சேர்ந்த சுரேஷ்வதி சவுகான் ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மானிய விலையில் சமையல் எரிவாயு, இலவச மின்சாரம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 6-ந் தேதி ஒரே கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முன்முனைப் போட்டி நிலவுகிறது.