டெல்லி: நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும். உ.பி.யின் ரேபரேலியிலும் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், மக்களவை கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பு இதில் ஏதாவதொரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்.
ரேபரேலியைப் பொறுத்தவரை காங்கிரசின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது. கேரளாவின் வயநாடு, ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற தொகுதியாக உள்ளது. இதில் எந்த தொகுதியை ராகுல் காந்தி தேர்தெடுக்கப் போகிறார் என்பதில் காங்கிரஸ் மட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகளே ஆவலாக உள்ளன.
இதுகுறித்து முன்னாள் மக்களவைச் செயலாளர் பிடிடி ஆச்சாரி ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளுக்கு எம்பியாக இருக்க முடியாது. ஜூன் 4ஆம் தேதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, ஜூன் 18ஆம் தேதிக்குள் ஏதாவதொரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும்.
காலியாக உள்ள ஒரு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தும். ராகுல் காந்திக்கு ஜூன் 18 வரை கால அவகாசம் இருந்தாலும், அதற்கு முன்பே மக்களவை கூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பிரதமர் பதவியேற்று புதிய அரசு அமையவுள்ளது.