டெல்லி:உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து நீடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளார். இடைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் கட்சியின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18வது மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதிகளிலும் 5 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி அபார் வெற்றி பெற்றார்.