மத்தியபிரதேசம்:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் நியாய யாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். யாத்திரையின் இடையே பட்டியலின மக்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி, சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து கேட்டறிந்தார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள வீடியோவில் அவரிடம் பேசிய பெண், செருப்பு அணிந்து தாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் தங்களை கெட்ட சகுணம் என சிலர் கூறுவதாகவும், செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
மேலும் தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்க வைப்பதாகவும் தூரமாகச் சென்று உட்காரு என தாங்கள் துரத்தப்படுவதாகவும் கூறி உள்ளார். மேலும் தங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் ஆதிக்கவாதிகள் தடுப்பதாகவும், திருமணத்திற்கு அழைத்து தாங்கள் அங்கு சென்றால், குப்பை தொட்டி அருகே தங்களை அமரச் சொல்வதாகவுல் இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள் என்றும் கூறினார்.
நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டால் தங்களை விரட்டி அடிப்பார்கள் என்றும் தங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளதாக பெண் தெரிவித்தார். இந்த வலிகளை எல்லாம் தாங்கள் தாங்கிக் கொண்டதாகவும் ஆனால், தங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது என்றும் நாடு சுதந்திர பெற்ற போதும் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம் என்றும் கண்ணீர் மல்க கூறினார்.
அனைத்து வகையிலும், தாங்கள் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பெண் தெரிவித்தார். மேலும் அந்த பெண் ராகுல் காந்தியிடம், நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன், இல்லையென்றால் கையிலேயே வைத்துக் கொள்கிறேன் என்ற கூறினார். இதை கேட்ட ராகுல் காந்தி உடனடியாக அந்த பெண்ணின் கையில் இருந்த செருப்பை அதை அணியும் படி பெண்ணிடம் தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில் யார் உங்களை செருப்பு அணிய அனுமதிப்பதில்லை என ராகுல் காந்தி பெண்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பட்டியலின பெண்கள் தரப்பில் வந்த பிரதிநிதி, கிராமத்தில் 90 சதவீதம் பேர் இந்த பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் உத்தர பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்டில் மட்டுமின்றி மத்திய பிரதேசத்தில் உள்ள 7 மாவட்டங்களில் இது போன்ற இன்னல்களுக்கு மக்கள் ஆளாக்கப்படுவதாக கூறினார்.
பட்டியலின பெண்களிடம் பேசிய வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். மேலும் அதில் அவர், நாட்டில் பட்டியல் இன மக்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளதாகவும் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் பட்டியலின குடும்பங்கள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் பதிவிட்டு உள்ளார்.
மேலும், உத்தர பிரதேசம் மாநிலம் புந்தேல்கண்டை சேர்ந்த சில பட்டியலின பெண்களுடன் உரையாடிய போது, அவர்கள் தினமும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் வலியை கண்ணீருடன் வெளிப்படுத்தியதாக ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார். மேலும் சாதிப் பாகுபாடுகளால் இந்த பட்டியலின பெண்களுக்கு காலில் செருப்பு அணிய சுதந்திரம் இல்லை, கிணறு, குளங்களில் தண்ணீர் எடுக்கும் சுதந்திரமும் வழங்கப்படுவதில்லை என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
மேலும், தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த பாகுபாடுகளை சந்தித்து வருவதாகவும் ஆனால் வரும் தலைமுறைகளும் இந்த சாபத்தை அனுபவித்தால், அது இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஆழமான கறையாக மாறும் என பதிவிட்டு உள்ளார். அதன் காரணமாகவே நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற எக்ஸ்ரே தேவைப்படுவதாகவும், அதன் மூலமாக தீண்டாமை போன்ற கொடிய நோயை ஒழிக்க, ஆரோக்கியமான, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று ராகுல் காந்தி பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: தடுப்பு காவலில் ஒருவரிடம் என்ஐ விசாரணை!