டெல்லி:18வது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (ஜூலை 22) தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட்டாகும்.
இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய நிர்மலா சீதாராமன் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் தாக்கல் உரையின் போது தெரிவித்தார்.
இந்த நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆங்காங்கே தொழில் சங்கங்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பும், எதிர்ப்பும் பரவலாக நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், மத்திய பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த பட்ஜெட், நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே (Kursi Bachao Budget) அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவும், சாமானிய இந்தியர்களுக்கு எந்த பலனும் இல்லாத வகையில் AA-வுக்கு மட்டும் பலன் தரும் விதமாகவும் மற்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை காப்பி அடிக்கும் விதமாகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.