புதுடெல்லி:மத்திய அரசு ஏழைகளுக்கு போக்கு காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மக்களின் உரிமைகளுக்காக ‘வெள்ளை டி-ஷர்ட் இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, வெள்ளை டி-ஷர்ட் இயக்கத்துக்கான பிரத்யேக வலைத்தளத்தையும் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து விவரித்துள்ள ராகுல் காந்தி, "நீங்கள் (மக்கள்) பொருளாதார நீதியில் நம்பிக்கை கொண்டால், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து, சமூக சமத்துவத்திற்காக போராடுங்கள். அனைத்து வகையான பாகுபாடுகளையும் நிராகரித்து, நம் நாட்டில் அமைதிக்காக பாடுபடுங்கள். உங்கள் வெள்ளை டி-ஷர்ட்களை அணிந்துகொண்டு இயக்கத்தில் சேருங்கள்.
இன்று மோடி அரசாங்கம் ஏழைகளை கண்டுகொள்ளாமல் முழு கவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில முதலாளிகளை வளப்படுத்துவதிலேதான் உள்ளது. இதன் காரணமாக, சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கள் ரத்தத்தாலும், வியர்வையாலும் நாட்டை வளர்க்கும் தொழிலாளர்களின் நிலை மோசமாகி கொண்டே செல்கிறது. தொழிலாளர்கள் பல்வேறு வகையான அநீதிகளையும், அட்டூழியங்களையும் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:திக் திக் நிமிடங்கள்: ஹைதராபாத் மெட்ரோவில் இதயம்! 100 கிமீ வேகத்தில் பாய்ந்து சென்ற ரயில்!
வெள்ளை சட்டை வெறும் துணியல்ல
இதுபோன்ற சூழலில், அவர்களுக்கு நீதியும், உரிமையும் கிடைக்க வலுவாக குரல் எழுப்புவது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த எண்ணத்துடன் #WhiteTshirtMovement ஐத் தொடங்குகிறோம். இந்த இயக்கத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று என் இளைஞர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த இயக்கத்தை பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்த லிங்கை பார்வையிடவும் -https://whitetshirt.in/home/hin அல்லது 9999812024 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். வெள்ளை சட்டை என்பது வெறும் துணியல்ல; கருணை, ஒற்றுமை, அகிம்சை, சமத்துவ கொள்கைகளின் சின்னம் ஆகும்.
கர்மா
இது நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது. வருமானம், சாதி மற்றும் மதம் ஆகியவற்றில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டவை. நமது அர்ப்பணிப்பு தர்மம் மற்றும் கர்மாவின் தத்துவத்திலிருந்து பெறப்பட வேண்டும். தர்மம் தன்னலமின்றி சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டிய கடமையாகும். கர்மா என்பது உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், நீதிக்காகப் போராடுவதற்குமான உறுதி ஆகும்.
வெள்ளைச் சட்டை நமது சின்னம். ஒருங்கிணைந்த இந்தியாவுக்கான அழைப்பு. அதை அணிவதன் மூலம், பாரத் ஜோடோவின் உணர்வை நாம் மதிக்கிறோம். பிளவுகளைக் குறைத்து, ஒருங்கிணைந்த, சமத்துவமான தேசத்தைக் கட்டியெழுப்புதலே பாரத் ஜோடோ யாத்ராவின் இலக்கு'' என ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவின் ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.