தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு காரணமாக பஞ்சாப் மாநிலம் முடங்கியது! - PUNJAB BANDH

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படுவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் முழு அடைப்பை முன்னிட்டு சாலையில் விவசாயிகள் தடுப்பை வைத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் முழு அடைப்பை முன்னிட்டு சாலையில் விவசாயிகள் தடுப்பை வைத்துள்ளனர். (Image credits-PTI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 4:37 PM IST

சண்டிகர்:வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் மேற்கொண்ட முழு அடைப்பு போராட்டத்தால் ரயில், சாலை போக்குவரத்து முடங்கியது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் என ஒரு வாரத்துக்கு முன்பே சம்யுக்தா கிசான் மோர்சா (அரசியல் சாரா அமைப்பு), கிஸான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை அழைப்பு விடுத்திருந்தன. பஞ்சாப் மாநிலம் சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள், சந்தைகள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டதால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

பாட்டியாலா-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் தரேரி ஜட்டன் சுங்க சாவடி அருகே ஏராளமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. நகரின் நுழைவு வாயிலான அமிர்தரசஸ் பொற்கோயில் நுழைவு வாயில் அருகே நூற்றுக்கணக்கான விவசாயிகள் குவிந்தனர். மேலும் பதிண்டாவின் ராம்புரா புல் பகுதியிலும் ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி: இதனிடையே அமிர்தசரஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பந்தர், "அவசரகால, அத்தியாவசிய சேவைகள் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. விமானத்ததில் பயணம் மேற்கொள்ள செல்கின்றவர்கள், வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்வோர், திருமண நிகழ்வுக்கு செல்வோர் ஆகியோர் தடை செய்யப்படவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்று அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இதன் மூலம் பஞ்சாபிகள் தங்கள் ஒற்றுமையை இன்று நிரூபித்து விட்டனர். முழு அடைப்பு கோரிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

அமிர்தசரசில் போராட்டம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் (Image credits-PTI)

வெற்றிகரமாக முழு அடைப்பு நடைபெற்று வருவதை பார்க்கின்றோம். ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு ரயிலும் பஞ்சாப்புக்குள் நுழையவில்லை.போக்குவரத்து நிறுவனங்கள், ஊழியர் சங்கங்கள், வணிக நிறுவனங்களின் சங்கங்கள், மத அமைப்புகள்ஆகியோர் எங்களுக்கு வலுவான ஆதரவைக் கொடுத்துள்ளனர்,"என்றார்.

இதையும் படிங்க:"தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்"-ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தவெக தலைவர் விஜய் மனு!

பக்வாரா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண்-44ல் சர்க்கரை ஆலை அருகே விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்வாரா முதல் நகோதர், ஹோஷியார்பூர் மற்றும் நவன்ஷஹர் வரையிலான சாலை போக்குவரத்து முடங்கியது. பக்வாரா-பங்கா சாலையில் பெஹ்ராம் சுங்கசாவடி அருகே விவசாயிகள் தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தானிய சந்தைகள் மூடப்பட்டிருந்தன.

மொகாலி மாவட்டத்தில், சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பல்வேறு பகுதிகளில் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரும்பாலான தனியார் பேருந்துகளும் முழு அடைப்புக்கு ஆதரவாக பேருந்துகளை இயக்கவில்லை. பஞ்சாப் வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் ரயில்வே துறை ரத்து செய்து விட்டது. பஞ்சாப் தலைநகரில் மட்டுமின்றி அம்பாலா உள்ளிட்ட பகுதிகளிலும் முழு அடைப்புக்கு ஆதரவு நிலவியது. அம்பாலாவில் இருந்து சண்டிகர், மொகாலி, பாட்டியாலா மற்றும் இதர அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும் எந்த போக்குவரத்தும் இல்லை.

சாகும் வரை உண்ணாவிரதம்: அம்பாலாவில் இருந்து சண்டிகர் செல்லும் பேருந்துகள் மாற்று வழிகளில் இயக்கப்பட்டன. சண்டிகரில் பல்வேறு பயிற்சி மையங்களில் படிக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முழு அடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை தருவதை சட்டப்பூர்வமாக மத்திய அரசு உறுதி செய்ய வலியுறுத்தி ஜக்ஜித் சிங் தலேவால் எனும் விவசாயி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரது உண்ணாவிரதம் 35 நாட்களை கடந்துள்ளது. இதனால் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில் இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் 31ஆம் தேதிக்குள் (நாளைக்குள்) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம் உதவி கோரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பஞ்சாப்-ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா (அரசியல் சாரா அமைப்பு) ஆகிய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி 13 முதல் முகாமிட்டுள்ளனர். இவர்கள் டெல்லி நோக்கி பல முறை பேரணி செல்ல முயன்றும் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

குறிப்பாக கடந்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை 101 விவசாயிகள் குழுவினர் டெல்லி நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால், ஹரியானா பாதுகாப்புப்படை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தினர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பென்ஷன் வழங்க வேண்டும், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், 2021ஆம் ஆண்டு லக்மிபூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details