சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகருக்கு, கடந்த ஜனவரி 30ஆம் தேதி மாநகராட்சி மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜகவைச் சேர்ந்த மனோஜ் சோங்கருக்கு 16 வாக்குகளும், ஆம் ஆத்மி - காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குகளும் கிடைத்தன. அதேநேரம், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 8 வாக்குகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டன. மேலும், இதன் மூலம் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் சார்பில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், 3 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. எனவே, இதனை எதிர்த்து ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், இதன் மீதான விசாரணையின்போது, சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்றும், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகத்தான் தான் இதை பார்ப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார். மேலும், இது போன்ற ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிய தலைமை நீதிபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளை சிதைத்துள்ளார் என்பது அந்த வீடியோவில் வெளிப்படையாகவே தெரிவதாகவும் சுட்டிக் காட்டினார்.
மேலும், பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற இருந்த சண்டிகர் மேயர் கூட்டத்திற்கும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே, சண்டிகர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தால் சண்டிகர் நிர்வாகம் நிவாரணம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
இதனையடுத்து, இது தொடர்பாக சண்டிகர் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. மேலும், மேயர் தேர்தல் தொடர்பான வழக்கும் பிப்ரவரி 26ஆம் தேதி இதனுடன் சேர்த்து நடைபெற உள்ளது. மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்திற்கு எதிராக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும், கடந்த இரண்டு நாட்களாக என்எஸ்யுஐ அமைப்பினர், சண்டிகரில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டும், முனிசிபல் கார்ப்பரேஷன் அலுவலக்த்திலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், நேற்றைய முன்தினம் (பிப்.7) பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற என்எஸ்யுஐ அமைப்பினர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்த போலீசார், அவர்களை கலைத்தனர். அப்போது, என்எஸ்யுஐ அமைப்பினர் மீது போலீசார் தடியடியும் நடத்தினர்.
இதையும் படிங்க:சண்டிகர் மேயர் தேர்தல்: "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.. ஜனநாயக படுகொலையை ஒருபோதும் அனுமதியோம்" - உச்ச நீதிமன்றம்!