தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"சிறைவாசிகள் மனிதநேயத்துடன் நடத்தப்பட வேண்டும்"-உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்! - PRISONER RIGHT

சிறைவாசிகள் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரிமை படைத்தவர்கள் என்று கூறிய உச்ச நீதிமன்றம் சிறைவாசியை வேறு சிறைக்கு மாற்றக் கூடாது என்ற ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் (Image credits-Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2025, 4:35 PM IST

புதுடெல்லி:சிறைவாசிகள் மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற உரிமை படைத்தவர்கள் என்று கூறிய உச்ச நீதிமன்றம் சிறைவாசியை வேறு சிறைக்கு மாற்றக் கூடாது என்ற ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தது.

சட்டப்பிரிவு 21ன் கீழ் சிறைவாசிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையை உறுதி செய்யும் வகையில் சிறை கலாச்சாரம் மற்றும் அதன் சூழல் சிறந்ததாக மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறை மாற்றத்தை எதிர்த்து வழக்கு:ஜார்கண்ட் மாநிலத்தில் கூலிப்படை தலைவரான திவாரிக்கு வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஹசாரிபாக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், சிறையில் கலவரத்தில் ஈடுபடலாம் என்பதால் அவரை தும்கா மத்திய சிறைக்கு மாற்றி மாநில சிறை துறை ஐஜி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் திவாரி வழக்கு தொடுத்தார். அவரது மனுவை ஏற்று மாநில அரசின் உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து ஜார்கண்ட் மாநில அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூலிப்படை தலைவர் திவாரி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், சிறைக்குள் விரும்பத்தகாத நிகழ்வுகளில் திவாரி ஈடுபட்டதில்லை. எனவே சிறைக்குள் கூலிப்படைகளுக்குள் மோதல் நிகழும் என்ற அச்சம் தேவையில்லை என்று கூறப்பட்டது.

ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கியின் கூற்றை மேற்கோள் காட்டிய உச்ச நீதிமன்றம், ஒரு சமூகத்தில் நாகரீகத்தின் அளவு என்பது அதன் சிறைசாலைகளுக்குள் நுழையும்போது தீர்மானிக்கப்படக் கூடியதாக இருக்கும் என்று கூறியது. மேலும் இந்த வழக்கில் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "ஒரு சிறைவாசி, விடுதலை பெறுவதற்கான உரிமையை இழக்கிறார் என்று அரசு அங்கீகரிக்கிறது. ஆனால், அவர் ஒரு நபர் என்ற வகையில் ஒரு மனிதராக நடத்தப்பட வேண்டிய உரிமை கொண்டவர் என்பது இன்னும் நிர்வகிக்கப்பட வேண்டும். அவருக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் அவருக்கு கிடைக்கப்படுவதாக இருக்க வேண்டும்,

சிறை நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும்:ஒழுங்கு, முறை என்பது உறுதியுடன் நிர்வகிக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வில் மேலும் கட்டுப்பாடுகள் தேவையில்லை. சிறைவாசிகளின் உரிமைகள் நிர்வகிக்கப்பட வேண்டும். சிறைக்கைதிகளின் மறுசீரமைப்பு, மறுவாழ்வு என்பதற்கான நோக்கம் விடாமுயற்சியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சட்டப்பிரிவு 21ன் கீழ் சிறைவாசிகள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதற்கான உரிமையை உறுதி செய்யும் வகையில் சிறை கலாச்சாரம் மற்றும் அதன் சூழல் சிறந்ததாக மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளுக்கு இணங்க சிறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலவரங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குற்ற நீதி நடைமுறையில் சிறைவாசிகள் கடைசி இடத்தில் உள்ளனர். தடுத்து வைத்தல், பழிவாங்கல் என்ற பண்டைய காலத்தில் இருந்து சிறைவாசிகள் சிறையில் உள்ளனர். இந்த நவீன காலத்தில் சிறைவாசிகள் திருந்துவதற்கான ஒரு முறையைக் கொண்டுள்ளது. எனவேதான் சிறைவாசிகள் விஷயத்தில் மறுசீரமைப்பு வேண்டும். சிறைவாழ்க்கையில் சிறைவாசிகளின் சுதந்திரத்தில் சில கட்டுப்பாடுகள் என்பது தேவையாக இருக்கிறது. சிறைகளில் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நிர்வகிப்பதற்கு இடையே, சிறை கைதிகளை சட்டத்தை மதிக்கும் மக்களாக மாற்றும் வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பங்கினை சிறை அதிகாரிகள் கொண்டிருக்க வேண்டும்.

இடமாற்றம் தேவையானது:சுனில் பத்ரா-டெல்லி நிர்வாகம் (1980) இடையேயான வழக்கில், நீதிபதி கிருஷ்ண ஐயர், கைதிகளின் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை கண்டித்தார்.மனித உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளுக்கு இணங்க சிறை நடைமுறைகள் மறுசீரமைக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

2003ஆம் ஆண்டு முதல் சிறை மாதிரி நடைமுறைகள் அமலில் உள்ளன. இது 2016ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இது சிறைவாசிகளின் பாதுகாப்பு, உரிமைகள், சிறை மறுசீரமைப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது,"என நீதிபதிகள் கூறினர்.

சிறை கைதிகளை இடமாற்றம் செய்வது என்பது தேவையானது, சிறைவாசிகளின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, சிறைக்குள் கூலிப்படை தாதாக்கள் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கப்பட வேண்டும். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு சிறை துறை ஐஜி செயல்பட்டுள்ளார் எனக் கூறி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details