டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில், கூட்டத் தொடருக்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நடப்பு கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமான வகையில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், எதிர்க்கட்சிகள் தங்களது குற்றங்களை மறைக்க அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
மேலும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து, மூன்றாவது முறையாக முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம் என்றார். மேலும், நாட்டு மக்களுக்கு தான் அளித்து வரும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதே நோக்கம் என்றும் கூறினார்.
இந்த பட்ஜெட் அமிர்த காலத்தின் மிக முக்கியமான பட்ஜெட் என்றும் அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான பாஜக அரசு திட்டங்களை தற்போதைய பட்ஜெட் தீர்மானிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்கால இந்தியா என்ற கனவுக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மழைக்கால கூட்டத் தொடரின் முதல் திங்கட்கிழமை, மங்களகரமான தொடக்கத்துக்கு உகந்த நாள் என்றும் பருவகாலத்தின் முதல் கூட்டத் தொடரின் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஒட்டுமொத்த நாடே உற்று நோக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், இது நேர்மறையான அமர்வாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அனைத்து எம்பிக்களையும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு தான் கேட்டுக்கொள்வதாக கூறினார். அனைத்துக் கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து, அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான மேடையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
2029 மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் எந்த விளையாட்டையும் விளையாடலாம் என்றும் ஆனால் அதுவரை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் நாட்டை மேம்படுத்துவதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்! எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன? - Parliament monsoon session