டெல்லி: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்ற பார்படோஸில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அங்கு பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும், அங்கு பெரில் புயல் தாக்குதல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்கள் அங்குள்ள விடுதிகளில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பார்படோசில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு திரும்ப அழைத்து வர ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் அங்கு பறந்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை.3) பார்படோசில் இருந்து சிறப்பு விமானத்தின் மூலம் புறப்படும் இந்திய வீரர்கள் நாளை காலை 6 மணி அளவில் தலைநகர் டெல்லியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட உள்ளது. அங்கிருந்து திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் இந்தியர்களுக்கு சாலை முழுவதும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதிக்கு இந்திய வீரர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு பிரதமர் மோடி 20 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியை சந்தித்து வாழ்த்து கூறுகிறார். உலக கோப்பை பிரதமர் மோடியிடம் வழங்கும் இந்திய வீரர்கள் தொடர்ந்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கின்றனர். கடந்த ஜூன் 29ஆம் தேதி பார்படோசில் உள்ள பிர்ட்ஜ்டவுனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது முறையாக 20 ஓவர் உலக கோப்பை வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ 17 அண்டுகளுக்கு பின்னர் 20 ஓவர் உலக கோப்பையையும் 13 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி கோப்பையையும் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க:உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?! - T20 World Cup 2024