டெல்லி: அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புருனே பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 4) சிங்கப்பூருக்கு சென்றார்.
அங்கு இரண்டு நாட்கள் இருக்கவுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்குமிடையே உள்ள நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சந்திப்புகளை நடத்த இருக்கிறார். முக்கியமாக, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர்கள் லீ சியென் லூங் மற்றும் கோ சோக் டோங் மற்றும் வணிக தலைவர்கள் ஆகியோருடன் சந்திப்பு நடக்கவுள்ளது.
இதில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இன்று சிங்கப்பூர் லயன் நகரில் தரையிறங்கிய மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடிக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டி மகிழ்ச்சி அடைந்தார்.
பிரதமரின் வருகையால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர்கள், '' இது எங்களது கனவு நனவாகிய தருணம். பிரதமர் மோடியை பார்க்க இன்று அதிகாலை 5 மணிக்கே எழுந்தோம்' என்று கூறினர்.