டெல்லி:இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய தலைநகர், மாஸ்கோவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக புறப்பட்டார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, சர்வதேச அளவிலான பிரச்சினைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றம், பொருளாதாரம், இயற்கை எரிவாயு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து மோடி பேசுவார் என கூறப்படுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா பயணம்:கடந்த 2019 ஆம் ஆண்டு விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"அடுத்த மூன்று நாட்கள் ரஷ்யா மற்றும் ஆஸ்திரியாவில் இருக்கும். இந்த பயணம் இரு நாடுகளிடையே உள்ள நட்புறவை மேம்படுத்தும், இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாற்றுவதற்கு ஆவலாக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா-ரஷ்யா இடையே இதுவரை 21 உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாட்டை தலைமை ஏற்று நடத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். அப்போது 28 இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அதன்பிறகு 2022, 2023-ம் ஆண்டுகளில் உச்சி மாநாடு நடைபெறவில்லை. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்திய- ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற உள்ளது.