சென்னை: சென்னையில் உள்ள ஆர்ட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மனோரமா ஹிதேஷி (78). இவர் நாய் ஒன்றை பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம், செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டுப்பாடுகள் விதித்து புதிய விதிகள் கொண்டு வந்ததுள்ளது.
அந்த விதிகள்படி அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்லப் பிராணிகள் மலம் கழித்தால் அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் முதல் முறை 1,000 ரூபாயும், இரண்டாவது முறை 2,000 ரூபாயும், மூன்றாவது முறை 3,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், இதுவே மூன்று முறைக்கு மேல் இதே நிலை தொடர்ந்தால் குடியிருப்புவாசியின் பெயர் அனைவருக்கும் அறிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிராணிகள் சிறுநீர் கழித்தால், 250 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இயற்கை உபாதைகளுக்காக திறந்தவெளிக்கு பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு லிப்ட்-ஐ பயன்படுத்தவும் தடை விதித்து விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் செல்லப் பிராணிகளுக்கான இந்த விதிகள் செல்லாது என அறிவிக்க கோரி மூதாட்டி மனோரமா, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை 16வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் முன்பு இன்று (ஜனவரி 4) விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை.. தமிழக அரசு ஜாக்பாட் அறிவிப்பு..!
அப்போது, குடியிருப்பு வாசிகளின் செல்லப் பிராணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து கொண்டு வரப்பட்ட இந்த விதிகள், விலங்குகள் நல வாரிய விதிகளுக்கு முரணானது என மனோரமா தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், விலங்குகள் நல வாரிய விதிகள், அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்களுக்கு பொருந்தாது. தங்களுக்கான விதிகளை தாங்களே வகுத்துக் கொள்ளலாம் என குடியிருப்போர் நலச் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "குடியிருப்போர் சங்கம் முன் வைத்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, விலங்குகள் நல வாரியத்தின் விதிகள் இந்திய அரசின் சட்டப்படி பிறப்பிக்கப்பட்டவை எனவும், பிராணிகள் மலம் கழித்தாலோ? சிறுநீர் கழித்தாலோ? அதை 10 நிமிடங்களில் சுத்தம் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கிப்படும் என நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது," என அறிவித்து உத்தரவிட்டார். மேலும், பிராணிகளுக்கு அபராதம் விதிக்க தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.