பெங்களூரு:கர்நாடக மாநில ஹசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூரு குற்றப்பிரிவு புலனாய்வு போலீசில் மதச்சார்பற்ற ஜனதா தள பெண் உறுப்பினர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரில், எம்பிகளுக்கான குடியிருப்புக்கு தன்னை அழைத்துச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ, புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டதாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தன்னையும் தனது கணவரையும் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது பாலியல் இச்சைகளுக்கு அடிபணியாவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பிரஜ்வல் ரேவண்ணா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணா மீது சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, தனக்கு எதிரான விசாரணையில் ஆஜராகாமல் இருக்க பெண் ஒருவரை கடத்தியதாக பிரஜ்வல் ரேவண்ணா மீது கே.ஆர் நகர் போலீசார் ஆள்கடத்தல் வழக்குபதிவு செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.