கன்னூர் : நாடு முழுவதும் முதல் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டம் கல்லியசேரியில் வயது முதிர்ந்தவர்களிடம் வீடு வீடாக சென்று வாக்குப்பதிவு நடத்தும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது மூதாட்டி ஒருவர் தனது வாக்கை செலுத்தும் போது அருகில் சிபிஎம் கட்சித் தலைவர் இருந்து முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் கல்லியசேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் அலுவலர் அளித்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறப்பு தேர்தல் அலுவலர்கள், சிறப்பு காவலர், வீடியோகிராபர் உள்ளிட்டவர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருன் கே விஜயன் உத்தரவிட்டார்.